ஒன்றுபடுவோம்

நீங்கள் உங்களிடையே உறவை முறித்துக் கொள்ளாதீர்கள்! ஒருவரை ஒருவர் புறக்கணிக்காதீர்கள்! ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! அல்லாஹவின் அடியார்களாகவும் உடன்பிறந்த சகோதரர்களாகவும் ஆகிவிடுங்கள்! எந்த முஸ்லீமும் தனது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது.
அனஸ்(ரலி) : புகாரி, முஸ்லீம்

ஒரு முஸ்லீம் தமது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்கலாகாது. இருவரும் சந்திக்கும்போது அவர் இவரைப் புறக்கணிக்க வேண்டாம். அவ்விருவரில் யார் ஸலாமைக் கொண்டு முந்துகிறாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர்
அபூஅய்யூப் (ரலி) : புகாரி, முஸ்லீம்

ஒவ்வொரு வியாழன், திங்களில் மக்களின் நல்லறங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத ஒவ்வொருவரையும் அல்லாஹ் மன்னிக்கிறான். ஒரு மனிதருக்கும் அவரது சகோதரருக்கும் இடையே பகை இருந்தால் அவனை மன்னிக்காமல் ''இவ்விருவரும் சமாதானமாகும் வரை இவ்விருவரையும் விட்டு விடுங்கள்"" என்று கூறிவிடுவான்.
அபூஹ-ரைரா(ரலி) : முஸ்லீம்

தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத்தைக் கொடுத்து வருதல், அத்தனை முஸ்லீம்களின் நலனிலும் அக்கறை செலுத்துதல் ஆகியவற்றின் மீது நபி(ஸல்) அவர்களிடம் நான் உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்.
ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி) : புகாரி, முஸ்லீம், திர்மிதீ.

அரபு தீபகற்பத்தில் தன்ளை மக்கள் வணங்குவதில் ஷைத்தான் நம்பிக்கையிழந்து விட்டான். எனினும் அவர்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி விடுவான்.
ஜாபிர்(ரலி) : முஸ்லீம்
உங்களில் ஒருவர் தனது சகோதரனுக்கு முகம் காட்டும் கண்ணாடி போன்றவர். (அபூஹ-ரைரா(ரலி) : தப்ரானி)

ஒரு முஸ்லிமுக்கு ஏற்பட்ட இவ்வுலக துன்பம் ஒன்றை இன்னொரு முஸ்லிம் நீக்கினால் மறுமை நாளின் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அவரை விட்டும் நீக்குகிறான்.

இவ்வுலகில் சிரமப்படுபவருக்கு உதவினால் இவ்வுலகிலும் மறுமையிலும் அவருக்கு ஏற்படும் சிரமத்தின் போது அல்லாஹ் உதவுவான். இவ்வுலகில் ஒரு முஸ்லிமின் குறையை மறைத்தால் அவரது குறையை இவ்வுலகிலும் மறுமையிலும் அல்லாஹ் மறைப்பான். ஒருவர் அடியான் ஒருவனுக்கு உதவி செய்யும் போதெல்லாம் அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான். (அபூஹ-ரைரா(ரலி) : திர்மிதி, முஸ்லிம்)

 

சிறந்த முஸ்லீம்

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோரர்களே. ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். (49:10)

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களை சந்திக்க அனுமதி கேட்டார். அவர் மிகவும் கெட்டவர் எனக் கூறிய நபி(ஸல்) அவருக்கு அனுமதியளியுங்கள் என்றனர். அவர் வந்ததும் அவரிடம் மென்மையாகப் பேசினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவரைப் பற்றி ஒரு விதமாகக் கூறிவிட்டு, அவரிடம் மென்மையாகவும் பேசினீர்களே"" என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''ஆயிஷாவே! ஒருவனது (கை மற்றும் வாயால் எற்படும்) தீங்குக்கு அஞ்சி மக்கள் எவனை (விமர்சிக்காது) விட்டு விடுகிறார்களோ அவன்தான் மறுமை நாளில் மனிதர்களில் மிகவும் கெட்டவன்" என விடையளித்தார்கள்.
ஆயிஷா(ரலி) : முஸ்லீம்

எவரது நாவால், கரத்தால் ஏனைய முஸ்லீம்களுக்குத் தீங்கு ஏற்படவில்லையோ அவர்தான் முஸ்லீம் என் நபி(ஸல்) கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) : புகாரி, முஸ்லீம்

மக்களிடம் நெருக்கமாகவும் மென்மையாகவும் எளிமையாகவும் நடப்பவருக்கு நரகம் ஹராம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இப்னு மஸ்வூத்(ரலி) : அஹ்மத்

நல்லவற்றில் எதையும் அற்பமாக நினைத்து விடாதே! உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே என்பதும் நபிமொழி.
அபூதர்(ரலி) : முஸ்லீம்

 

ஆடையலங்காரம்

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக. (7:26)

நீங்கள் வெண்மையான ஆடைகளையே அணியுங்கள்! உங்கள் ஆடைகளில் அதுவே சிறந்ததாகும். மரணித்தவர்களுக்கும் வெண்மை ஆடைகளிலேயே கபனிடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) : திர்மிதீ, அஹ்மத், அபூதாவூத், இப்னுமாஜா)

அல்லாஹ் தனது அடியானுக்கு வழங்கிய அருள், அடியானிடம் தென்படுவதை அல்லாஹ் விரும்புகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) : திர்மிதீ, ஹாகிம்

என் சமுதாயத்திலுள்ள ஆண்களுக்குத் தங்கமும் பட்டாடையும் விலக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூமூஸா(ரலி) : திர்மிதீ, நஸயீ

யார் தனது (கீழ்) ஆடையைத் தரையில் படுமாறு அணிகிறாரோ மறுமை நாளில் அல்லாஹ் அவரைப் பார்க்க மாட்டான் என்று நபி(ஸல்) கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இருந்தாலே தவிர, எனது ஆடையின் ஒரு முனை கீழே தொங்கி விடுகிறதே, என்று அபூபக்ர்(ரலி) கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீர் பெருமைக்காக செய்பவராக இல்லை என்று கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : புகாரி, அபூதாவூத், நஸயீ

 

சிகையலங்காரம்

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழும் போது உங்களை (ஆடைகளால்) அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (7:31)

எனக்கு அடர்த்தியான நீண்ட முடி இருந்த, அதை அழகுபடுத்திக் கொள்ளுமாறும் அன்றாடம் தலைவாரிக் கொள்ளுமாறும் நபி(ஸல்) கட்டளையிட்டனர்.
அபூகதாதா(ரலி) நஸயீ

பரட்டைத் தலையுடன் ஒரு மனிதரை நபி(ஸல்) கண்டனர். இவருக்கு தனது தலைமுடியைப் படியச் செய்யும் பொருள் கிடைக்கவில்லையா? என்று கேட்டார்கள்.
ஜாபிர்(ரலி) : நஸயீ

ஒரு சிறுவனின் தலைமுடி பாதி சிரைக்கப்பட்டும், பாதி சிரைக்கப்படாமலும் இருப்பதை நபி(ஸல்) கண்டனர். இதைத்தடை செய்த நபி(ஸல்) அவர்கள், முழுமையாகச் சிரையுங்கள்! அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்! என்று கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : முஸ்லீம்

ஒட்டு முடி வைத்துக் கொள்பவளையும், வைக்கச் சொல்பவளையும் அல்லாஹ் சபித்ததாக நபி(ஸல்) அவர்க்ள கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லீம்

ஆண்களைப் போல் நடக்கும் பெண்களையும், பெண்களைப்போல் நடக்கும் ஆண்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தனர்.
இப்னு உமர்(ரலி) : புகாரி

 

வாசகர்களுக்கு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நோக்கம் :
தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்ட நபிமொழிகளை தொடர்ந்து வெளியிடுவது (இன்ஷா அல்லாஹ்)

டைப்பிங் உதவி :
நண்பர்கள்

வலைப்பதிவு மற்றும் யூனிகோட் எழுத்துரு மாற்றம் :
அபூ உமர்

 

This page is powered by Blogger. Isn't yours?