நோன்பின் மாண்பு

நன்மையின் வழிகளை உனக்கு நான் கூறட்டுமா? என்று நபி(ஸல்) கேட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே கூறுங்கள் என்று நான் கூறினேன். "நோன்பு கேடயமாகும். தண்ணீர் நெருப்பை அணைப்பதுபோல் தர்மம் செய்வது தவறுகளை அழித்துவிடும்" என்று அப்போது நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் இப்னு ஜபல்(ரலி) - நூற்கள்: அஹ்மத், தப்ரானி"

நோன்பைத்தவிர ஆதமுடைய மக்களின் செயல்கள்யாவும் அவர்களுக்கே உரியனவாகும் நிச்சயமாக நோன்பு எனக்கே உரியதாகும். அதற்கு நானே கூலி கொடுக்கிறேன்" என்று அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். (மேலும் தொடர்ந்து) நோன்பு என்பது ஒரு கேடயமாகும் உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது கெட்டவார்த்தைகளை பேசலாகாது, உரத்த குரலிலும் பேசலாகாது. யாரேனும் அவரை ஏசினால் அல்லது வம்புக்கு வந்தால் "நான் நோன்பாளி, நான் நோன்பாளி" என்று கூறி விடவேண்டும்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லீம்

ரமலான் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர் என நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லீம்

அல்லாஹ்வின் தூதரே! வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத்தவிர யாருமில்லை. நீங்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் என்று உறுதியாக நான் நம்பிக்கை கொண்டு ஐங்காலத் தொழுகைகளையும் தொழுது, ஜகாத்தையும் வழங்கி ரமளானில் நோன்பு நோற்று வந்தால் நான் யார்? என்று ஒரு மனிதர் கேட்டார் அதற்கு நபி(ஸல்) அவர்கள், "நீர்சித்திகீன்கள் (உண்மையாளர்கள்), ஷஹீத்கள் (உயிர் தியாகிகளில்) ஒருவராவீர்" என்று நபி(ஸல்) விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு இப்னு முர்ரா(ரலி) - நூற்கள்: இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா

இந்த மாதம் வந்துவிட்டது இதில் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவு ஒன்று உள்ளது. யார் அதை இழந்துவிட்டாரோ (அந்த இரவை வணங்காமல் கழித்துவிட்டாரோ) அவர் அனைத்து நன்மைகளையும் இழந்துவிட்டார். துர்பாக்கியவான் தவிர அந்த இரவை மற்றவர்கள் இழக்கமாட்டார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னுமாலிக்(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லீம்

நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ரமளான் மாதத்தில் (ப10ரண நம்பிக்கையுடனும் நன்மையை எதிர் நோக்கியும் யார் நோன்பு நோற்கிறாரோ அவர் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி) : நூற்கள்: புகாரி, முஸ்லீம், அபூதாவூத், நஸயீ

அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு நல்லறத்தைக் கூறுங்கள்! என்று நான் கேட்டேன் அதற்கு நபி(ஸல்) அவர்கள் "நீ நோன்பைக் கைக்கொள்! நிச்சயமாக இதற்கு ஈடானது எதுவுமில்லை" என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! எனக்கொரு நல்லறத்தைக் கூறுங்கள் என்று மீண்டும் கேட்டேன் அதற்கு நபி(ஸல்) அவர்கள் "நீ நோன்பைக் கைக்கொள்! நிச்சயமாக இதற்கு ஈடானது எதுவுமில்லை" என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா(ரலி) - நூற்கள்: நஸயீ, இப்னுகுஸைமா"

உறுதியான நம்பிக்கையுடனும் மறுமையை எதிர்பார்த்தும் யார் ரமலானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லீம்

 



<< Home

This page is powered by Blogger. Isn't yours?