கீழே உள்ளவர்களைப் பாருங்கள்

"உங்களை விட கீழே உள்ளவர்களைப் பாருங்கள்! உங்களைவிட மேலே உள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய அருட் கொடைகளை நீங்கள் மறவாமலிருக்க இதுவே ஏற்ற வழியாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அபூஹுரைரா(ரலி) : புகாரி, முஸ்லிம்

 

யாசகம் கேட்டுக் கொண்டே இருப்பவன்

பிறரிடம் யாசகம் கேட்டுக் கொண்டே இருப்பவன் மறுமையில் இறைவனைச் சந்திக்கும் போது முகத்தில் சதையற்றவனாக வருவான் என்பது நபிமொழி

இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லிம்

 

உன்னுடையது உன்னுடையது எது?

ஆதமுடைய மகன் "என்னுடையது என்னுடையது" என்கிறான் ஆதமுடைய மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் பிறருக்குக் கொடுத்துக் களித்ததையும் தவிர வேறு எது உன்னுடையது? என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னுஷ்ஷிக்கிர்(ரலி) : முஸ்லிம்

 

புகழ்வதில் வரம்பு மீறாதீர்!

''நீங்கள் வரம்பு மீறி புகழ்வதை அஞ்சிக் கொள்ளுங்கள், இப்படி மிகைப்படுத்தியதுதான் உங்களின் முன் சென்றவர்களை அழித்தது", என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர்(ரலி) - நூற்கள்: புகாரி, அஹ்மத்

மர்யமின் மகனை (ஈஸா நபியை) வரம்பு மீறி புகழ்ந்ததைப் போன்று என்னை வரம்ப மீறி புகழாதீர்கள்! நான் (அல்லாஹ்வின்) அடிமையே! எனவே அல்லாஹ்வின் அடிமையென்றும் அவனின் தூதரென்றும் கூறுங்கள்! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர்(ரலி) - நூற்கள்: புகாரி, அஹ்மத்

இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் சிலையைப் போன்று ஆக்கிவிடாதே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அதா இப்னு யஸார்(ரலி) - அஹ்மத், முஅத்தா

ஒரு மனிதர் ஒருவரை வரம்பு மீறி புகழ்ந்ததைகச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் நீங்கள் அழிந்து போனீர்கள் என்று கூறினார்கள்.
அபூமூஸா(ரலி) - புகாரி, முஸ்லீம்

எனது கப்ரை விழா கொண்டாடும் இடமாக ஆக்கி விடாதீர்கள்! என் மீது நீங்கள் ஸலவாத்துச் சொல்லுங்கள்! நீங்கள் எங்கிருந்து சொன்னாலும் அது என்னை வந்தடையும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா(ரலி) - அபூதாவூத், அஹ்மத்
கலீஃபா(உஸ்மான்(ரலி) முன்னிலையில்) ஒருவர் எழுந்து அவர்களைப் பற்றி புகழ ஆரம்பித்தார். (இதைச் செவியுற்றி) மிக்தாம்(ரலி) அவர்கள், அவர் முகத்தில் மண்ணை வீசினார்கள். உமக்கு என்ன நேர்ந்தது என (மிக்தாம்(ரலி) இடம்) உஸ்மான்(ரலி) கேட்டபோது, ''வரம்பு மீறி புகழ்பவரின் முகத்தில் மண்ணை வீசுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்" என கூறினார்கள்.
அபூமஃமர் - முஸ்லீம், அபூதாவூத், திர்மிதீ



 

நாவைப் பேணுவீர்

ஒரு மனிதன் கேள்விப்பட்டதை எல்லாம் பேசுவது அவன் பொய்யன் என்பதை விளக்கப் போதுமானதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்

ஒரு மனிதன் தான் காணாதததைக் கண்டேன் எனக் கூறுவதுதான் பொய்களிலே மிகப்பெரும் பொய்யாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) - நூல்: முஸ்லீம்

யார் தமது தாடைகளுக்கு இடையே உள்ளதை (நாவை)யும் தமது கால்களுக்கிடையே உள்ளதையும் (சரி வரப் பயன்படுத்துவதாக) பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்காக சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) - நூற்கள்: புகாரி, முஸ்லீம்

அல்லாஹ்வின் தூதரே! ஈடேற்றம் எதில் உள்ளது? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உன் நாவைக் கட்டுப்படுத்திக் கொள்! உன் வீடு உனக்கு போதுமானதாக ஆகட்டும்! உன் தவறுகளுக்காக அழு! என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி) - நூல்: திர்மிதீ

அல்லாஹ்வின் தூதரே! என்விஷயமாக நீங்கள் மிகவும் அஞ்சுகின்ற விஷயம் எது என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தமது நாவைப் பிடித்துக் காட்டி ''இதைத் தான" என்றார்கள்.
சுப்யான் இப்னு அப்துல்லாஹ்(ரலி) - நூல்: திர்மிதீ

கோள் சொல்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - நூல்: முஸ்லீம்

உன் சகோதரனின் துன்பத்தில் மகிழ்ச்சியடையாதே! அவ்வாறு அடைந்தால் அல்லாஹ் அவனுக்கு அருள்புரிந்து உன்னைச் சோதிப்பான்.
அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ(ரலி) - நூல்: திர்மிதீ

 

கெட்ட நிலைமைகள் ஏற்படுவதற்கு முன்

இறைவனை மறக்க செய்யும் வறுமையையோ,
அல்லது தவறான வழியில் செல்லத் தூண்டும் செல்வத்தையோ,
அல்லது ஆரோக்கியத்தைப் பாழாக்கும் நோயையோ,
அல்லது விரைந்து வாய்குளறச் செய்துவிடும் முதுமையையோ,
அல்லது வரவிருப்பவைகளில் மிகவும் கெட்ட தஜ்ஜாலையோ,
அல்லது யுக முடிவு நாளையோதான் நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். எனவே இந்நிலைகள் எற்படுவதற்கு முன் நன்மைகளை விரைந்து செய்யுங்கள் என்று முஹம்மது(ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - நூல்: திர்மிதீ

 

நல்லறங்களை நாடுவோம்

முன்னொரு காலத்தில் வசதி வாய்ப்பு நிறைந்த ஒருவர் கஷ்ட வாழ்க்கையில் இருப்போரின் கடன்களை தள்ளுபடி செய்து மன்னிப்பவராக இருந்து வந்தார். தம் மக்களையும் அவ்வாறு நடக்க வேண்டும் என்று ஏவிவந்தார். இதனைத் தவிர நல்லறங்களில் வேறு எதனையும் அவர் செய்திராத நிலையில் மரணித்து விட்டார். இவர் விஷயமாக இறைவன்(மலக்குகளிடம்) "இவரை விட மன்னிப்பதற்கு நானே மிக்க தகுதி வாய்ந்தவன். எனவே இவரை விட்டு விடுங்கள்" என்று கூறினான்.

நூல்: முஸ்லீம்

 

This page is powered by Blogger. Isn't yours?